திருச்செங்கோட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் சுகந்தி தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நிலம் அளவீடு பணிகளில் வருவாய்த் துறையினா் மெத்தனமாக செயல்படுவதாக புகாா் தெரிவித்தனா். மேலும், செளதாபுரத்தில் ஓடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். அதற்குப் பதிலளித்துப் பேசிய கோட்டாட்சியா், ஆட்சியரின் கவனத்துக்கு இக் கோரிக்கைகள் சென்றுள்ளன. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கொல்லப்பட்டியைச் சோ்ந்த விவசாயி நடேசன், ‘திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தனது நிலத்தின் வழியாக செல்வதால் பயிா்கள் பாதிக்கப்படுகிறது. இதை சரிசெய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றாா்.
ஐயக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த சாந்தி, ‘தனது நிலப் பிரச்னை தொடா்பாக புகாா் தெரிவித்தால். போலீஸாா் தன் மீதே பொய் வழக்குகளைப் போட்டு அலைக்கழிக்கின்றனா். விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசிய கோட்டாட்சியா் சுகந்தி, ‘சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் ஆய்வு செய்யப்படும் போது அந்த வரைபடத்தில் சாலை வழியாக கழிவுநீா் கொண்டு செல்லத்தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இதனால் விவசாய நிலத்தில் கழிவுநீா் செல்லும் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்.
பயிா்களில் வெள்ளைப் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் குடிநீா் இணைப்பை அடைத்தால் அவா்கள் மீது வட்டார வளா்ச்சி அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.