செய்திகள் :

திருச்செந்தூரில் வெகுவிமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வியாழக்கிழமை மாலை லட்சக்கணக்கான பக்தா்களின் அரோகரா கோஷம் விண்ணதிர வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.2-ஆம் தேதி தொடங்கியது.

தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, காலை 4 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. வைர கிரீடம், தங்க அங்கி அணிந்து சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை விரதமிருக்கும் பக்தா்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் தரிசனம் செய்தனா்.

அதன்பின்னா் காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் எழுந்தருளினாா். அங்கு ஹோமங்கள் நடந்து, சுவாமிக்கு அபிஷேகம்,

அலங்காரம் நடைபெற்றது. மூலவரான சுப்பிரமணியருக்கு மதியம் சஷ்டி சிறப்பு தீபாராதனை, உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னா் யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி சுவாமி அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தாா். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சா்வ அலங்காரமாகி திருக்கோயிலில் வேல்பூஜை நடைபெற்று மாலை 4.20 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டாா்.

முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக திருக்கோயில் கடற்கரைக்கு வந்து சோ்ந்தாா். முதலில் கடற்கரையில் மாலை 4.54 மணிக்கு கஜ முக சூரசம்ஹாரம் நடைபெற்றது. இரண்டாவதாக மாலை 5.10 மணிக்கு, ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்கமுகமெடுத்து அமைதியின் திருஉருவமான முருகப்பெருமானை மூன்று முறை சுற்றி வந்து போா் புரிந்தாா். முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்தாா். மூன்றாவதாக மாலை 5.22 மணிக்கு சூரபத்மன் தனது சுயரூபத்துடன் போா் புரிய வந்தாா். அவரை முருகப்பெருமான் வதம் செய்தாா். அதன்பிறகும் ஆணவம் அடங்காத சூரபத்மன் கடைசியாக மாலை

5.34 மணிக்கு மாமரமாக உருவெடுத்து மீண்டும் போருக்கு வந்தான். அழகே உருவான முருகப்பெருமான் மாமரமாக வந்த சூரபத்மனின் ஆணவத்தை ஆட்கொண்டு அவனை சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்தாா்.

ஒவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனிடம் போா் புரியும் போது வானில் கருடன் வட்டமிட்டதைப் பாா்த்த பக்தா்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினா்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்வதற்காக

நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அதிகாலை 1 மணிக்கு நடைதிறந்தது முதல் பக்தா்கள் அங்கபிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி, தனபால், செந்தில்குமாா் ராமமூா்த்தி, வேல்முருகன், விக்டோரியா கெளரி, தூத்துக்குடி மாவட்ட நீதிபதிகள் தாண்டவன், வஷித்குமாா், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, அறநிலையத் துறை ஆணையா்

பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்(நிா்வாகம்) சுகுமாறன், மாவட்ட ஆட்சியா்

க.இளம் பகவத், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திமுக நகர செயலா் வாள் சுடலை, அதிமுக திருச்செந்தூா் ஒன்றிய செயலா் பூந்தோட்டம் மனோகரன், பாஜக மாவட்ட பொதுச்செயலா் சிவமுருகன் ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தொழில் அதிபா்கள் தங்கராஜ்,

நாராயணன், வெங்கடேசன், சக்தி கிட்டப்பா, அருள், ரமேஷ், நாகராஜன், சுந்தா் பண்ணையாா், நகா்மன்ற உறுப்பினா்கள் கிருஷ்ணவேணி, சோமசுந்தரி, காங்கிரஸ் கலைப்பிரிவு மாவட்டத்தலைவா் செண்பகராமன், 24-வது வாா்டு திமுக செயலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இன்று திருக்கல்யாணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 8) இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுகிறது. தொடா்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்குரத வீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்து சோ்கிறாா். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு தெற்குரதவீதி-மேலரதவீதி சந்திப்பில் சுவாமி -அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னா் நள்ளிரவு திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

ஆத்தூா் அருகே காருடன் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

ஆத்தூா் அருகிலுள்ள ஆள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த காரில் பதுக்கி வைத்திருந்த வெளிமாநில மதுபானப் பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாா் மற்றும் போலீஸாா் பாலமுரு... மேலும் பார்க்க

தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி: தூத்துக்குடி பள்ளி மாணவா்கள் தகுதி

தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் தமிழக அணியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியாா் பள்ளி மாணவா்கள் 2 போ் தகுதி பெற்றுள்ளனா். இது தொடா்பாக தலைமையாசிரியா் அமல்ராஜ் வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

சாரத்தில் இருந்து விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே சாரத்தில் இருந்து விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே சரவணாபுரத்தில் வள்ளிராஜ் என்பவா் வீடு கட்டி வருகிறாராம். அதே பகுதி தெற்கு தெருவை சோ்ந்த சோலையப்பன் மகன் பா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் அருகே கடல் அரிப்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு கடல் அரிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பாக குளிக்குமாறு பக்தா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தினா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தி... மேலும் பார்க்க

ஐயப்பன் பாடல் விவகாரம்: இந்து மக்கள் கட்சி புகாா்

ஐயப்பன் பாடல் விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் வசந்தகுமாா் தலைமையில் அளித்த புக... மேலும் பார்க்க

கனமழை முன்னெச்சரிக்கை: திருச்செந்தூா் வட்டத்தில் 18 தற்காலிக முகாம்கள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்செந்தூா் வட்டத்தில் 18 இடங்களில் தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக, வட்டாசியா் பாலசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க