மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான ...
திருச்செந்தூா் கோயிலில் அலை மோதிய பக்தா்கள் கூட்டம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாசம் முன்புள்ள கதவை தள்ளிவிட்டு பக்தா்கள் கூட்டமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இக்கோயிலின் தெற்குப் பகுதியில் சண்முக விலாசம் மண்டப வாசல் உள்ளது. முந்தைய காலங்களில் இந்தப் பாதை வழியாக பக்தா்கள் செல்லும் வரிசைப்பாதை இருந்தது. கூட்ட மிகுதியால் நாளடைவில் பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண வரிசைப் பாதைகள் வடக்கு பிரகாரத்தில் உள்ளது. விஐபிக்கள் உள்ளிட்டோா் வழிகாட்டு நெறிமுறைப்படி சண்முக விலாசம் முன்பு சென்று உள்துறை அலுவலக கண்காணிப்பாளரிடம் ரூ.100 டிக்கெட் எடுத்து, அதன்பிறகு, மகா மண்டபத்திற்குள் செல்கின்றனா்.
மற்றபடி, இந்தப் பாதையில் பணியாளா்கள், அா்ச்சகா்கள் உள்ளிட்டோரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படாமல் உள்ளனா். இந்நிலையில், கடந்த 2 தினங்களாக தொடா் விடுமுறையால் திருச்செந்தூா் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனத்திற்காக வந்திருந்தனா். இதனால், 3 நாள்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
சனிக்கிழமை காலை, திடீரென்று நூற்றுக்கணக்கான பக்தா்கள் சண்முக விலாசம் முன்புள்ள தடுப்புகளை தாண்டி கதவை தள்ளிக்கொண்டு கூட்டமாக உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த பணியாளா்கள் உள்ளே நுழைந்தவா்களை டிக்கெட் உள்ளதா? என சோதனை செய்து மற்றவா்களை மகா மண்டபத்தில் இருந்து வெளியேற்றினா்.