திருடியதாகக் கூறி விசாரணை: கோவை கல்லூரி மாணவி தற்கொலை!
கோவையில் தனியார் கல்லூரி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கும் விடுதியும் செயல்படுகிறது.
இந்த பராமரிக்கல் அலாய்டு சயின்ஸ் கல்லூரியில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த அனுப்பிரியா(18) என்பவர் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கு மருத்துவமனையின் 4 -வது கட்டிடத்தில் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. மதியம் அனைவரும் உணவு அருந்தச் சென்றுவிட்டனர்.
அப்போது மாணவ - மாணவிகள், தங்கள் உடமைகளை பயிற்சி நடந்த வகுப்பறையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதில் 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி வைத்திருந்த பையில் பர்சில் இருந்த பணம் 1,500 ரூபாய் திடீரென மாயமானது. உணவு அருந்தி விட்டு வந்த மாணவி பணம் மாயமானதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பேராசிரியர்களிடம் கூறியுள்ளார்.
அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது அனுபிரியா தனியாக அந்த அறையை விட்டு வெளியே வருவது தெரிய வந்தது. இதனால் அந்த மாணவி எடுத்திருக்கலாம் என பேராசிரியர்கள் சந்தேகப்பட்டுள்ளனர்.
உடனே இதுகுறித்து பாராமெடிக்கல் கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அனுப்பிரியாவை கல்லூரி முதல்வர் 5 ஆவது மாடி கட்டட அறையில் வைத்து முதல்வர் மற்றும் பேராசிரியர் விசாரித்துள்ளனர். அப்பொழுது சக மாணவர்களும் இருந்துள்ளனர். மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை விசாரணை நடந்துள்ளது. ஆனால் அந்த மாணவிதான் எந்த தவறும் செய்யவில்லை, பணம் எடுக்கவில்லை என்று மறுத்துள்ளார். மற்ற மாணவ - மாணவிகள் வகுப்புகள் முடிந்து விடுதிகளுக்கும், வீடுகளுக்கும் சென்ற நிலையில் அனுபிரியாவை அவர்கள் விடவில்லை என கூறப்படுகிறது.
மாலை 6.30 மணியளவில் அனுப்பிரியாவை ஐந்தாவது மாடியில் இருந்து வீட்டுக்கு செல்லும்படி கூறி அனுப்பி உள்ளனர். இதனால் சோகத்துடன் அவமானம் அடைந்து வெளியேறிய அனுப்பிரியா நான்காவது தளத்திற்கு வந்தவுடன் திடீரென்று அங்கு இருந்து கீழே குதித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் அவர் அவமானம் அடைந்து தற்கொலை செய்த தகவல் சக மாணவ - மாணவிகளுக்கு பரவியது. அவர்கள் சம்பவம் நடந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர். பேராசிரியர்களை வெளியில் செல்லவிடாமல் தடுத்துள்ளனர். கல்வீச்சு சம்பவமும் நடந்துள்ளது. இதில் கல்லூரியின் கண்ணாடி உடைந்தது. அதன் பிறகு மாணவி அனுப்பிரியா உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே அனுப்பிரியா தற்கொலை செய்த தகவல் திருவண்ணாமலையில் உள்ள அனுப்பிரியாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
தந்தை இல்லாத நிலையில் ஒரே மகளான அனுப்பிரியா இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வானதி உறவினர்களுடன் கோவைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் வானதி புகார் செய்தார். இன்று மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் அறை முன்பு அவருடன் படித்த மாணவ - மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் திரண்டு நின்றனர். அவர்கள் மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு வருகிறார்கள். இதனால் அங்கே போலீஸ் குறிக்கப்பட்டு உள்ளது. கோவை அரசு மருத்துவமனை முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.