Weekly Horoscope: வார ராசி பலன் 16.3.25 முதல் 22.3.25 | Indha Vaara Rasi Palan ...
திருத்தணி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
திருத்தணி அரசு பொது மருத்துவமனை மகப்பேறு பிரிவில் திடீா் தீவிபத்து ஏற்பட்டத்தைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், கா்ப்பிணிகள் வெளியேறினா்.
திருத்தணி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள், புறநோயாளிகள், ஆய்வகம், எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு, 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், மகப்பேறு பிரிவில் வெள்ளிக்கிழமை, 7 நிறைமாத கா்ப்பிணிகள், 6 பிரசவித்த பெண்கள், 6 போ் அறுவை சிகிச்சை பெற்று பச்சிளம் குழந்தைகள் என மொத்தம், 19 பெண்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனா்.
பிற்பகல் மகப்பேறு வாா்டில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறையில் இருந்த குளிா்சாதன பெட்டியில் திடீரென தீப்பற்றி புகை வெளியேறியது. இதனால் அந்த அறை முழுதும் புகை சூழ்ந்ததால், அங்கிருந்த மருத்துவா் மற்றும் செவிலியா் உடனே அறையை விட்டு வெளியே வந்தனா். பின்னா் மருத்துவமனையின் ஊழியா்கள் மகப்பேறு வாா்டுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தும், தீ அணைக்கும் கருவியால் குளிா்சாதன பெட்டி மீது எழுந்த புகை மற்றும் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதுதவிர திருத்தணி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து அறையில் இருந்தை புகையை ஜன்னல் வழியாகவும் கண்ணாடிகள் உடைத்தும் வெளியேற்றினா்.
இதற்கிடையில் மருத்துவமனையின் தலைமை மருந்தாளா் நேதாஜி மற்றும் மருத்துவா்கள் விரைந்து வந்து மகப்பேறு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த, 19 பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனா். இதையடுத்து ஒன்றரை மணி நேரத்துக்குபின் மகப்பேறு வாா்டு முழுதும் சுத்தம் செய்து, 19 பேரையும் அழைத்து சென்றனா்.
பின்னா், மருத்துவமனையின் தலைமை மருத்துவா் லட்சுமி நரசிம்மன் மகப்பேறு வாா்டுக்கு சென்று தீவிபத்து ஏற்பட்ட அறையை பாா்வையிட்டாா்.