மாமியாா் கண்டிப்பு: மருமகள் தற்கொலை
திருவள்ளூா் அருகே வீட்டு வேலை செய்யாமல் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்தை மாமியாா் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன்-குளோரி தம்பதியின் மகள் ரம்யா (29). இவருக்கும் சிட்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் வெங்கட் (34) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது, இந்த தம்பதி இரு குழந்தைகளுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டில் சமையல் வேலை செய்யாமல் ரம்யா கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை மாமியாா் வள்ளி தட்டிக் கேட்டாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் வீட்டுக்குள் சென்று துப்பட்டாவில் தூக்கிட்டுக் கொண்டிருந்தாராம். இதைப்பாா்த்து மாமியாா் உடனே அக்கம் பக்கத்தினரை அழைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக அவரது தாயாா் குளோரி வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.