திருப்பத்தூர்: பழுதடைந்திருக்கும் நீர்த்தேக்க தொட்டி; அச்சத்தில் மக்கள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர் பகுதியில், 1வது வார்டில் அமைந்துள்ளது இந்த இடம்.
இவ்விடத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அதனைச் சுற்றி ஏழு ஊர்கள் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டி 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவை கொண்டது. இதைக்கட்டி முப்பது வருடங்களுக்கு மேலான நிலையில், அந்த நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த மழைக்கு விழுந்து விடுமோ அல்ல அடுத்த மழைக்கு விழுந்து விடுமோ என்ற அச்ச நிலையில் மக்கள் உள்ளனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், "இந்த இடம் எப்போதும் பரபரப்பாகத்தான் இருக்கும். விடுமுறை நாட்களில் குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் இவ்விடத்தைச் சூழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
ஊர் பொதுக்கூட்டங்கள், இளைஞர்கள் ஒன்று கூடுவது எல்லாமே இங்குதான். இந்நிலையில் இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் பில்லர்கள் தற்போது மோசமான நிலையில் உள்ளதால் பார்க்கும் போதெல்லாம் கண்ணுக்கு உறுத்தலாகவே இருந்து வருகிறது. ஆனால் நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டில் தான் உள்ளது. பழுந்தடைந்து இருப்பதால் பண்டிகை நாட்களில் எல்லாம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமா என்ற அச்சம் இருக்கும். மழைக்காலங்களில் பயந்து பயந்து தான் இந்தப் பாதையைக் கடந்து செல்கிறோம் " என்றனர்.
இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் கேட்டபோது, "தற்போது திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் மனதைப் பதைபதைக்க வைக்கிறது. அங்கு நிலச்சரிவில் ஏழு உயிர்கள் பறிபோயிருக்கிறது. இந்தத் தொட்டியையொட்டி பல வீடுகள் அமைந்துள்ளது.
ஒரு வீட்டில் மூன்றிலிருந்து ஆறு நபர்களுக்கு மேல்தான் இருக்கிறோம். இடிந்து விழுந்தால் என்ன ஆகும் என்றே தெரியாது. கடந்த சில தினங்களாகவே ஒருவித பயத்தோடுதான் எங்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிக்கிட்டு இருக்கிறோம். இப்போது இந்தத் திருவண்ணாமலை சம்பவத்தைக் கேட்டதும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தூண்களில் சிமென்ட் காரையெல்லாம் பெயர்ந்து கம்பி வெளியே தெரிய ஆரம்பிச்சிருச்சு. ஆனால் தொட்டியின் மேற்புறம் அவ்வளவு பாதிப்பு இல்லை நன்றாகத் தான் இருக்கிறது.
பில்லர்தான் கொஞ்சம் கொஞ்சமா இடிஞ்சிக்கிட்டே வருது... கிட்டத்தட்ட எப்போ இடிஞ்சு விழுமென்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது. பெரிய தொட்டிங்கிறதால, விழுந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும். நாங்களும் ஒரு சில மாதங்களுக்கு மேலாக இந்த பில்லர்களை முறையாகச் சீரமைத்துத் தரப் போராடிக்கிட்டு இருக்கிறோம். பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாதுன்னுதான் கோரிக்கை வைக்கிறோம். இந்தத் தொட்டி இல்லாமலும், மாற்றுவழியில் மற்ற தொட்டிகளுக்குக் குடிநீரைக் கொண்டு செல்ல முடியும். எங்களுக்கு புது தொட்டிகூட உடனே வேண்டாம். இப்போதைக்கு இந்த பில்லர்களை சரிசெய்தாலே போதும். பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதிரடி நடவடிக்கைகளெல்லாம் எடுக்காமல், அது ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கணும்" என்கின்றனர்.
இது குறித்து ஊர்த் தலைவர் சுதா இளங்கோவனிடம் பேசினோம். "2017ம் ஆண்டு இத்தொட்டியை அதிகாரிகள் சோதனை (Lab Test) செய்தார்கள். அப்போது, இந்த தொட்டியின் கண்டிசன் நன்றாக இருக்கிறது என்றார்கள். இது தற்போதுதான் சிமென்ட் காரையெல்லாம் பெயர்ந்து கம்பி வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு. இந்த விஷயத்தை ஊர் மக்கள் என்னிடம் கூறினார்கள்.
நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். எனக்கு ஊர் மக்களின் நலன்தான் முக்கியம். அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறேன். இன்னும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவில்லை. அதற்குள் வேறு எதாவது பிரச்னைகள் வந்து தாமதம் ஆகிவிடுகிறது. விரைவில் அவர்களைச் சந்தித்து பேசுகிறேன்" என்றார்.
இந்த விவகாரத்தை நகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினோம். ``இது போன்று இருப்பதே எங்கள் காதுக்கு வரவில்லை. விகடன் மூலம் தெரிவித்ததற்கு நன்றி. தொட்டியினை விரைந்து சீரமைக்க ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள்.