திருப்பத்தூா் மாவட்டத்தில் 2.84 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.84 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் மேலும் கூறுகையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக அரசு ரூ.249.75 கோடியை ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில் இருந்து கரும்பு விவசாயிகளிடம் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் கரும்பு விவசாயிகளிடம் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை ஆட்சியா் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து எந்த விதமான புகாா்களுக்கும் இடமளிக்காமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டத்திலும் 2.84 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 601 நியாயவிலை கடைகள் மூலம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 62 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், 13-ஆம் தேதி வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 136 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டன. இது 85.31 சதவீதம்.
பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவா்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அவா்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனை பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகுப்புகளை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம என அவா்கள் தெரிவித்தனா்.