திருப்பூர் : குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் - சிக்கிய ஊராட்சி செயலாளர்
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட எல்லப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் மகேஷ் பிரபு(44). இவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற எல்லப்பாளையம்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்து குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி செயலாளர் செல்வராஜ் (51), மகேஷ் பிரபுவிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மகேஷ்பிரபு இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். போலீஸார் அறிவுரையின்படி, ரசாயணம் தடவிய லஞ்சப் பணத்தை ஊராட்சி செயலாளர் செல்வராஜிடம் மகேஷ்பிரபு வழங்கினார்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸார் செல்வராஜை பிடித்தனர். லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவரது அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது, கணக்கில் வராத ரூ. 71,500-யை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செல்வராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் பெற்றதுடன், கணக்கில் வராத ரூ.71,500 இருந்தது திருப்பூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.