மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்
திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம் போட்ட காதலன்
மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியைச் சேர்ந்தவர் பக்தி மாயகர் (26). இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது தோழியை பார்க்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. கடைசியாகக் காணாமல் போன அடுத்த நாள் பக்தி மாயகர் தனது சகோதரனுக்கு அனுப்பிய மெசேஜில் தான் நலமாக இருப்பதாகவும், என்னைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் மாயகர் குடும்பம் அவர் காணாமல் போனது குறித்து போலீஸில் புகார் செய்திருந்தனர். போலீஸார் இது குறித்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் மாயகர் தனது சகோதரனுக்கு மெசேஜ் அனுப்பியபோது, அவரின் மொபைல் போன் எங்கு இருந்தது என்பதை ஆய்வு செய்ததில், அது உள்ளூரில் உள்ள சைலி பீர்பாரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாயகர் குடும்பத்தினர் மாயகருக்கு சைலி பார் உரிமையாளர் துர்வாஸ் பாட்டீலுடன் தொடர்பு இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் துர்வாஸ் பாட்டீலை பிடித்துச்சென்று விசாரித்தபோது சமீபத்தில் மாயகரை சந்திக்கவே இல்லை என்று தெரிவித்தார்.
அவர் பொய் சொல்வதை தெரிந்துகொண்ட போலீஸார் அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். சைலி பாரில் வெயிட்டராக வேலை செய்து வந்த ராகேஷ் என்பவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக ராகேஷ் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் சைலி பார் உரிமையாளர் துர்வாஸ் பாட்டீலிடம் விசாரிக்க முடிவு செய்தபோது அவர் ஏற்கனவே மாயகர் கொலையில் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றிருப்பது இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி நிதின் கூறுகையில்,''மாயகர் காணாமல் போனது குறித்து துர்வாஸிடம் தீவிர விசாரணை நடத்தியபோது துர்வாஸ் அழ ஆரம்பித்துவிட்டார். மாயகருடன் துர்வாஸிற்கு தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை. தனது சாதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் மாயகர் அவரை விட்டுச் செல்ல மறுத்துள்ளார். அதோடு அந்நேரம் மாயகர் கர்ப்பமாகவும் இருந்துள்ளார். இதனால் மாயகரை தனது பீர் பாருக்கு வரச்சொல்லி இருக்கிறார். அவரை பீர் பார் மாடிக்கு அழைத்துச் சென்ற துர்வாஸ் வயரை வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை மலைப்பகுதியில் போட்டுள்ளார்.
கொலை செய்து முடித்த பிறகு துர்வாஸ் தன்னைவிட்டு காதலி சென்றுவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் நடனமாடி இருக்கிறார். அவர் நடனமாடிய வீடியோ காட்சிகள் எங்களுக்குக் கிடைத்து இருக்கின்றன. இதே முறையில் தான் வெயிட்டர் ராகேஷையும் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதி அது குறித்து விசாரித்தோம். இதில் ராகேஷ் உட்பட மேலும் இரண்டு பேரை கொலை செய்ததாக துர்வாஸ் தெரிவித்துள்ளார். அதே பாரில் சீதாராம் என்பவரைக் கொலை செய்தபோது அதனை ராகேஷ் பார்த்துவிட்டதால் அவரைக் கொலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக துர்வாஸ் தெரிவித்துள்ளார். சீதாராமும், துர்வாஸும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம்.
மாயகரிடம் துர்வாஸ் போனில் பேச மறுத்து மாயாகர் நம்பரை பிளாக் செய்தபோது துர்வாஸை தொடர்பு கொள்ள சீதாராமிற்கு மாயகர் போன் செய்துள்ளார். இதனால் சீதாராமிற்கும், மாயகருக்கும் இடையே தொடர்பு இருக்குமோ என்று துர்வாஸ் சந்தேகப்பட்டார். ஒரு முறை மாயகருக்கு சீதாராம் மெசேஜ் செய்தபோது அதனை துர்வாஸ் பார்த்துவிட்டார். உடனே அவரை துர்வாஸ் அடித்து உதைத்தார். அதன் பிறகு ராகேஷிடம் சொல்லி சீதாராமை அவரது வீட்டில் கொண்டுபோய்விட்டு விடும்படி கூறினார்.

வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட சீதாராம் இறந்து போனார். சீதாராமை துர்வாஸ் அடித்ததை ராகேஷ் பார்த்திருந்தார். இதனால் ராகேஷ் இது குறித்து வெளியில் சொல்லிவிடுவார் என்று துர்வாஸ் பயந்தார். எனவே ராகேஷிற்கு சிறிது பணம் கொடுத்து இந்த ஊரை விட்டு சென்றுவிடும்படி துர்வாஸ் கேட்டுக்கொண்டார். ஆனால் சில நாட்கள் கழித்து ராகேஷ் ஊரை விட்டு செல்லவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து ராகேஷை கொலை செய்ய துர்வாஸ் திட்டம் தீட்டினார்.
இதையடுத்து ராகேஷை ஒரு நாள் அழைத்து அவருடன் சேர்ந்து துர்வாஸ் மது அருந்தினார். பின்னர் அவரை மலைப்பகுதிக்கு அழைத்து சென்று மற்றொரு வெயிட்டர் உதவியோடு கழுத்தை நெரித்துக் கொலை செய்து மலையில் போட்டுவிட்டு வந்ததாக துர்வாஸ் தெரிவித்துள்ளார். மாயகர் மற்றும் ராகேஷ் இரண்டு பேரின் உடல்களையும் ஒரே மலையில்தான் போட்டு இருந்தார். இதனால் அவரை அழைத்து சென்று மலையில் சோதித்தபோது ராகேஷ் உடல் கிடைக்கவில்லை. மாயகர் உடல் மட்டும் எலும்புக்கூடாக கிடைத்தது'' என்று தெரிவித்தார்.