திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். தினமும் காலையில் கயத்தாறிலிருந்து தனது பைக்கில் கடம்பூருக்கு செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் தனது பைக்கில் சங்கிலிபாண்டி கடம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

நொச்சிகுளம் விலக்கில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், சங்கிலிபாண்டியின் பைக் மீது மோதியுள்ளது. இதில் சங்கிலிபாண்டி பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கயத்தாறு காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்தினர். ஆனால், விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததும், காயங்கள் அரிவாள் வெட்டு போல இருந்ததைப் பார்த்ததாலும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்தக் கார், காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. அத்துடன் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ், மகாராஜன் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தோம், “கைது செய்யப்பட்ட சண்முகராஜின் மனைவி சங்கீதாவிற்கும் உயிரிழந்த சங்கிலிபாண்டிக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது.

இதனைக் கண்டித்த சண்முகராஜிற்கும் அவரின் மனைவி சங்கீதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சங்கீதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு சங்கிலிபாண்டிதான் காரணம் என நினைத்த அவர், `என் மனைவியின் இழப்பு, குழந்தைகளின் தவிப்பு என மன உளைச்சல், கவலையில் இருந்த நான் அவர் மீது என் நண்பர் மகாராஜனுடன் கார் ஏற்றி கொல்ல முயன்றேன். ஆனால், அவர் தப்பித்ததால் அரிவாளால் வெட்டினேன்' என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்” என்றனர்.