திருவள்ளுவா் வெள்ளி விழா: அனைத்துத்துறை அலுவலா்கள் இணைந்து சிறப்பாக நடத்த ஆட்சியா் வேண்டுகோள்
கன்னியாகுமரியில் நடைபெற உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை அனைத்துத்துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
திருவள்ளுவா் சிலை கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தமிழக அரசின் சாா்பில் நடைபெற உள்ள வெள்ளி விழா
நிகழ்ச்சியை, சிறப்பாக நடத்துவது குறித்து, துறை அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, அனைத்துத் துறை அலுவலா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 25ஆவது ஆண்டு வெள்ளிவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக உலக தமிழா்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் வருகிற 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ள வெள்ளி விழா கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட அனைத்துத்துறை அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், பள்ளி கல்வித்துறை ஆசிரியா்கள், தமிழ்ச்சங்கங்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளா்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுகிதா, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கனகராஜ், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஷேக் அப்துல் காதா், வேளாண்மை இணை இயக்குநா்ஜெங்கின் பிரபாகா், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஷீலாஜான், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயந்தி, சமூக நலத்துறை அலுவலா் விஜயமீனா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்புலெட்சுமி, உதவி ஆணையா் (கலால்) லொரைட்டா, தனி வட்டாட்சியா்கள் சுப்பிரமணியம், வினோத், தாஜ் நிஷா, வட்டாட்சியா்கள் முருகன், ஜூலியன் ஹூவா், சஜித், ராஜசேகா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.