திருவள்ளூர்: `குப்பை மேடான சென்னை டு நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை'; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், செங்குன்றத்தை அடுத்து, நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கரனோடை என்ற புறநகர்ப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் அந்த இடமே குப்பை மேடாக மாறியிருக்கிறது. மேலும், குப்பைகளால் எழும் துர்நாற்றத்தால் அந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளின்றனர்.
இதுபற்றி அப்பகுதிக்கு அருகிலுள்ள மீன் மார்கெட் மக்களிடம் விசாரித்தபோது, ``சில மாதங்களாகவே இங்கு குப்பைகளையும், சிக்கன் கழிவுகளான இறக்கைகள் போன்றவற்றையும் சிலர் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். பகலில் யாரும் இந்தக் குப்பைகளைக் கொட்டுவது இல்லை. இரவு நேரங்களில் வந்து கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர்.
துர்நாற்றத்தால் அந்த வழியில் சாதாரணமாகக் கூட செல்ல முடிவதில்லை. சுத்தம் செய்தாலும் மீண்டும் வந்து குப்பையைக் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் எங்களுக்குத்தான் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகூடவே, மீன் மார்க்கெட் வியாபாரிகள் தங்களுக்கு நிரந்தரமான மீன் மார்க்கெட் ஒன்றை அரசு கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காரனோடை மீன் வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கர், ``என்னோட தாத்தா காலத்துல இருந்து 40 வருசத்துக்கு மேல மீன் வியாபாரம் பண்ணிட்டு இருக்கோம். என்னோட தாத்தா காலத்துல ஊருக்கு மத்தியில மீன் வியாபாரம் செஞ்சாங்க. அதுக்கப்புறம் 3 இடத்துக்கு மேல மாறி, எட்டு வருசத்துக்கு முன்னாடி இந்த இடத்துக்கு வந்தோம்.
இங்க பத்துக்கும் மேல மீன் கடைகள் இருக்கு. கடல் மீன், ஏரி மீன் எல்லாம் கிடைக்கும். ஆனா, இங்க தண்ணி வசதி கிடையாது. ஊருக்குள்ள போய்தான் குடத்துல தண்ணி கொண்டு வந்துட்டு இருக்கோம். நைட் 7 மணி வரைக்கும் மார்கெட் இருக்கும் ஆனா, லைட் வசதி கிடையாது. பேட்டரி லைட் தான் வச்சிருக்கோம். ரோட்டுல இருக்கிற லைட் வெளிச்சம் மட்டும் கொஞ்சம் வரும். மத்தபடி இருட்டாதான் இருக்கும். இங்க இருக்கிறதுல 2 கடை மட்டும்தான் மேல தகரம் போட்டிருக்கு. மத்த கடையெல்லாம் ஓலையில தான் இருக்கு.
இங்க இருக்கிற ஒரு மரத்தோட நிழலை நம்பிதான் மீன் வாங்க வர மக்களும், மீனை சுத்தம் செய்றவங்களும், மீன் வியாபாரிகளும் இருக்கோம். அதேசமயம், ரோட்டுல இருந்து இந்த மீன் மார்கெட் பள்ளத்துல இருக்கு. தண்ணி போக குழாய் இருந்தாலும், அதிகமா மழை பேஞ்சா தண்ணி கடைக்குள்ள வந்துருது. எனவே, அதிகமான மக்கள் வந்துபோற இந்த இடத்துல அரசு ஒரு நிரந்தரமான கட்டடத்தை கட்டித் தரணும்" என்றார். குப்பை மேட்டை அகற்றி, மீன் மார்க்கெட் கோரிக்கை அரசு அதிகாரிகள் நிரந்தர காண்பார்கள் என அப்பகுதி மக்களும், மீன் வியாபாரிகளும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...