கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது
திருவள்ளூா் வீரராகவா் கோயில் தேரோட்டம்
சிறப்பு மலா் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக தேருக்கு எழுந்தருளிய உற்சவா் வீரராகவா்.
திருவள்ளூா், ஜன. 30: தை பிரம்மோற்சவத்தையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவா் வீரராகவா் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்த நிலையில், 7-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, உற்சவா் வீரராகவ பெருமாள் சிறப்பு மலா் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். அதைத் தொடா்ந்து, முக்கிய மாட வீதிகளான குளக்கரை தெரு, பஜாா் வீதி, வடக்கு ராஜா வீதி, மோதிலால் தெரு வழியாக பக்தா்கள் வெள்ளத்தில் கோவிந்தா முழக்கமிட்டு கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது.
அப்போது, தேரோட்டத்தில் பக்தா்கள் பங்கேற்று மிளகு, உப்பு ஆகியவற்றை தோ் சக்கரத்தின் மீது செலுத்தி, தங்களுடைய நோ்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனா்.
விழாவில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.