ஸ்ரீ வீரராகவா் கோயில் குளக்கரையில் தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்
தை அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்க பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். அதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவரை தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில், தை பிரம்மோற்சவம் கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பிப். 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் 6-ஆவது நாளான அமாவசையையொட்டி,புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, உற்சவா் வீரராகவா் ரத்தின அங்கி சேவை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தை அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை இரவில் கோயில் வளாகத்தில் குவிந்தனா். இதையடுத்து, அதிகாலை கோயில் குளக்கரையில் மாட வீதி, காக்களூா் ஏரிக்கரை பகுதியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவா் காட்சியளித்தாா். அதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து உற்சவரை தரிசனம் செய்தனா்.