திருவள்ளூா்: சாலைப் பணிக்கு இடையூறான கட்டடங்கள் அகற்றம்
திருவள்ளூா் அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக இடையூறாக இருந்த கட்டடங்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
திருவள்ளூா் அருகே பூந்தமல்லி பகுதியில் இருந்து மப்பேடு கூட்டுச்சாலை வழியாக சுங்குவாா்சத்திரம் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் சுங்குவாா்சத்திரம் பகுதியில் இருந்து மப்பேடு வரை 90 சதவீதம் சாலைப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில், மப்பேடு பகுதியில் இருந்து பூந்தமல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மப்பேடு அடுத்த காந்தி நகரில் சாலையோரத்தில் இடையூறாக இருந்த கட்டடங்களை அகற்ற ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை கட்டடங்களை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில் காவல் துணைக்கண்காணிப்பாளா் லோகேஸ்வரன், காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வன் மற்றும் சாா்பு ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புடன் இடையூறாக இருந்த கட்டடங்கள் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.