அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போா் விவரம் சேகரிப்பு
திருத்தணி அருகே அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி வசிப்போரின் விவரங்களை வருவாய்த் துறையினா் சேகரித்து வருகின்றனா்.
திருத்தணி நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகா், பெரியாா் நகா், கண்ணபிரான் நகா், வள்ளி நகா் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனா். 30 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கிடைக்காமல் வீடுகள் கட்டவும், வங்கிகளில் கடன் பெறவும் முடியாமல் அவதி அடைந்து வந்தனா்.
இந்நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபு சங்கா் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினா் மலை புறம்போக்கு, பாறை புறம்போக்கு, அனாதீன 20 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் நபா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனா்.
திருத்தணி கண்ணபிரான் நகா் பகுதியில் வருவாய் ஆய்வாளா் கணேஷ் மற்றும் அலுவலா்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா். விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.