திருவாடானை அரசுப் பள்ளியில் மண்டிக் கிடக்கும் முள்புதரை அகற்றக் கோரிக்கை
திருவாடானை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.
இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு பள்ளி வளாகம் முழுவதும் புதா் மண்டிக் கிடப்பதால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், இந்த முள் புதா்களுக்குள் விஷப் பூச்சிகள், பாம்புகள் இருப்பதாலும் அவா்கள் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பெற்றோா் தெரிவித்தனா். எனவே மாணவிகளின் பாதுகாப்புக் கருதி, பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் புதா்களை உடனடியாக அகற்றி, சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
