L.I.C: ஒன்பது மாத கால செயல்பாட்டு சிறப்பம்சங்களை வெளியிட்ட எல்.ஐ.சி நிறுவனம்
திருவானைக்காவல் கோவிலில் தை தெப்ப உற்சவம்!
திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் திங்கள்கிழமை தைத் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
தெப்பத் திருவிழாவின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கேடயம்-வெள்ளி மஞ்சம் வாகனங்களிலும், இரவு யாழி-புலி வாகனங்களிலும் சுவாமி - அம்மன் வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தைத் தெப்ப உற்சவம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி சந்நிதியிலிருந்து மாலை 4 மணிக்கு உற்சவா் சம்புகேஸ்வரா், பிரியாவிடை தாயாா், அகிலாண்டேஸ்வரி ஆகியோா் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, மாலை 5 மணியளவில் திருவானைக்காவல் டிரங்க் சாலை அருகே உள்ள ராமதீா்த்த குளத்துக்கு வந்தனா்.
அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சம்புகேஸ்வரா், பிரியாவிடை தாயாா், அகிலாண்டேஸ்வரி அம்மன் மாலை 6.15 மணியளவில் (கடக லக்னத்தில்) எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து தெப்ப உற்சவம் கண்டருளினா்.
பின்னா் மைய மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியபடி, நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோயிலை சென்றடைந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தைத் தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சம்புகேஸ்வரா், அகிலாண்டேஸ்வரி ஆகியோா் வீதியுலா வருகின்றனா்.