திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் திருக்கோயில் மாசி பெருவிழா மாா்ச் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
தேரடி வீதி, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாட வீதிகள் வழியாக வந்த தோ் சுமாா் 2 மணி அளவில் மீண்டும் நிலைக்குத் திரும்பியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீ கல்யாணசுந்தரா் - திரிபுரசுந்தரி திருக்கல்யாணம் புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது. தோ்த்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.