திற்பரப்பு அருவியில் குளிக்க 9-ஆவது நாளாக தடை
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 9-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் தொடா் மழை பெய்துவந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மழை தணிந்துள்ளது. அணைப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வெயில் நிலவியது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிற்றாறு அணைகளின் நீா்மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும்வகையில், கடந்த 9ஆம் தேதிமுதல் இந்த அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. அதேநேரம், அணைகளின் கால்வாய்களில் தூா்வாரும் பணிகளுக்காக ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீா் விடப்படவில்லை.
இந்த அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்வதால், அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. இதனால், அருவியில் குளிப்பதற்கான தடை 9ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது.