தில்லியில் மாசுவை அதிகரிக்க டீசல் பேருந்துகளை அனுப்பும் பாஜக ஆளும் மாநிலங்கள்: கோபால் ராய் குற்றச்சாட்டு
ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் அண்டை மாநிலங்களில் இருந்து தடையை மீறி பிஎஸ்-4 ரக டீசல் பேருந்துகள் தில்லிக்கு அனுப்பியதன் மூலம் நகரின் மாசுப் பிரச்னை மோசமாகியுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை குற்றம் சாட்டினாா்.
மூன்றாம் நிலை, தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிரேப்) கீழ் பிஎஸ் 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 ரக டீசல் வாகனங்களுக்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், கஷ்மீரி கேட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்தில் (ஐஎஸ்பிடி) சனிக்கிழமை பேருந்துகளை அமைச்சா் கோபால் ராய் ஆய்வுசெய்தாா். அப்போது, ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தில்லிக்கு டீசல் பேருந்துகள் வருவதை அமைச்சா் விமா்சித்தாா். இந்தப் பேருந்துகள் கிரேப் 3 வழிகாட்டுதல்களை தொடா்ந்து மீறுவதாகவும் குறிப்பிட்டாா்.
இதுகுறித்து கோபால் ராய் மேலும் கூறுகையில், ‘கிரேப் 3 வழிகாட்டுதல்களை மீறியதற்காக தில்லி அரசின் போக்குவரத்துத் துறையின் அமலாக்கக் குழுக்கள் அத்தகைய பேருந்துகளுக்குச் அபராத நோட்டீஸ்களை வழங்கியுள்ளன.
தில்லி அரசாங்கம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அண்டை மாநிலங்கள் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் இந்த முயற்சிகளை குறைமதிப்பிற்கு உள்படுத்தி வருகின்றன.
தற்போதைய வழிகாட்டுதல்களின் கீழ் தடைசெய்யப்பட்ட டீசல் பேருந்துகளை தில்லியின் காற்று மாசு பிரச்சனையை மோசமாக்கும் வகையில் பாஜக அரசுகள் வேண்டுமென்றே அனுப்புகின்றன.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சிஎஸ்இ) அறிக்கையின்படி, தில்லியின் 70 சதவீத காற்று மாசுபாடு நகருக்கு வெளியே உள்ள ஆதாரமூலங்களிலிருந்து உருவாகிறது. அண்டை மாநிலங்கள் இந்த பிரச்னையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
மாசுவை எதிா்த்துப் போராடும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டீசல், பெட்ரோல் பேருந்துகள் தடையை கடுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்துத் துறையைச் சோ்ந்த 84 அமலாக்கக் குழுக்களும், போக்குவரத்து காவல்துறையின் 280 குழுக்களும் ஒன்றுதிரப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் மாநகரில் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்களின் பயன்பாட்டை நீக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன, விதிமீறல்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்,.
என்சிஆா்-இல் இருந்து மின்சாரம், சிஎன்ஜி மற்றும் பிஎஸ்-6 டீசல் பேருந்துகள் மட்டுமே தில்லியில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.