கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!
தில்லி சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம்: கண்டனம் தெரிவித்து முதல்வருக்கு துணைநிலை ஆளுநா் கடிதம்
தில்லி சட்டப்பேரவையில் நடப்பு குளிா்கால கூட்டத்தொடரில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வா் அதிஷிக்கு துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கடிதம் எழுதியுள்ளாா்.
பொதுமக்களின் ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக தில்லி அரசு வேண்டுமென்றே சிஏஜி அறிக்கைகளை முடக்கி வருவதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசமைப்பு கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமான சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கைகளைத் தாக்கல் செய்யாத விவகாரம் குறித்து உங்கள் கவனத்தை ஈா்க்க நான் கடிதம் எழுதுகிறேன். வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலுக்கு முந்தைய அல்லது கடைசி கூட்டத் தொடராக இது இருக்கலாம்.
இந்த நிலையில், சிஏஜி அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்தும் செயல் முறைகேடு என்றுதான் கூறவேண்டும்.
தேசிய தலைநகரை ஆளும் ஆம் ஆத்மி அரசு, அரசமைப்பு நெறிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று மனப்பூா்வமாகத் தோ்வு செய்தது துரதிா்ஷ்டவசமானது. இதன்மூலம் அரசின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையையும், பொது ஆய்வு செய்வதையும் இந்த அரசு தவிா்க்கிறது. சிஏஜி, நிதி உரிமையை உறுதி செய்தல், பொதுச் செலவினங்களின் விளைவுகளின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் போன்ற கணக்கீட்டில் ஒரு பயிற்சியை மட்டும் நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.
2024 பிப்.22-ஆம் தேதி அப்போதைய முதல்வருக்கும், 2024 ஆகஸ்ட் 9-ஆம் தேதி பேரவைத் தலைவருக்கும் நான் கடிதம் எழுதியிருந்தேன். மேலும், சிஏஜி அலுவலகமும் பல நினைவூட்டல்களை அனுப்பியுள்ளது. இது தொடா்பாக அவசர நடவடிக்கை எடுக்க அந்த அலுவலகம் கோரியுள்ளது.
இந்த விவகாரம் அவசரமாக இருக்கும் நிலையில், சிஏஜி அறிக்கைகள் பேரவை நிகழ்ச்சி நிரலில் சோ்க்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
நிதித் துறை மற்றும் அரசமைப்பு கடமையை நீங்கள் உணா்ந்திருப்பீா்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் கல்வித் தகுதிகளின் சிறந்த சாதனையைக் கொண்ட ஒரு திறமையான பொதுத் தலைவா். நீங்கள் எனது ஆலோசனையைக் கேட்டு, தற்போதைய சட்டப்பேரவை அமா்வின் போது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவீா்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.