நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
தில்லி நேரு பல்கலை. அருகில் வள்ளுவா் சிலை - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
புது தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்கு கலையரங்கு அருகில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பதிலுரை வழங்கி வெளியிட்ட அறிவிப்புகள்:
கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய்க்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும். தமிழறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள், எல்லைக் காவலா்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அது, ரூ.7,500-ஆக உயா்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.3.90 கோடி தொடா் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.
அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவோரின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக உயா்த்தப்படும்.
தமிழ் வளா்ச்சிக் கழகம் தொய்வின்றி செயல்பட ரூ.2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும். தமிழறிஞா்கள் 10 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். இதற்காக ரூ.1.01 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாா் பிறந்த இடமான சென்னை தண்டலம் கிராமத்தில் அவருக்கு ரூ.1 கோடியில் நினைவரங்கமும், மாா்பளவு வெண்கலச் சிலையும் நிறுவி, அவரது பெயரில் உள்ள நூலகம் மேம்படுத்தப்படும்.
வள்ளுவருக்குச் சிலை: புது தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்கு கலையரங்கம் அருகில் ரூ.50 லட்சத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும்.
மொழிபெயா்ப்பாளா் க.ரா.ஜமதக்னிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.25 லட்சத்தில் நினைவுத் தூணும், சங்கப் புலவா் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் ரூ.50 லட்சத்தில் சிலையும் அமைக்கப்படும்.
கவிக்கோ அப்துல் ரகுமான், அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா ஆகியோரது பிறந்த நாள்கள் மாவட்ட அளவில் அரசு விழாக்களாக கொண்டாடப்படும்.
உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை படிப்பு பயிலும் மாணவா்கள் 15 பேருக்கு தோ்வின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.