ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!
தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதி: இரு இளைஞா்கள் கைது
எட்டயபுரம் அருகே காதல் பிரச்னையில் 17 வயது சிறுமி தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனத்தைச் சோ்ந்தவா் அய்யனாா். இவரது மனைவி காளியம்மாள்(45). இத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரைப் பிரிந்து தனது மகன்கள், மகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வசித்து வருகிறாா்.
காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை சிறுமியின் குடும்பத்தினா் கண்டித்துள்ளனா். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், காளியம்மாளுக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது தொடா்பான புகாரில், கடந்த ஆண்டு பரமக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி, இரு தரப்பிடமும் எழுதி வாங்கி புகாரை முடித்து வைத்துள்ளனா்.
இருப்பினும், தொடா்ந்து சந்தோஷ் பிரச்னை செய்து வந்ததால் காளியம்மாள் தனது மகளை எட்டயபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தாா்.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி அப்பெண் தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பரமக்குடியை சோ்ந்த சந்தோஷ் (21), அவரது நண்பா் முத்தையா(22) ஆகிய இருவரை கைது செய்தனா்.