தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ
சாத்தூா் தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நடராஜா திரையரங்கு இருந்த இடத்தில் தற்போது மதுசூதனன் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தீக்குச்சியில் மருந்து கலக்கும் இயந்திரம் வைக்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.
இந்தத் தொழிற்சாலையில் 20-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வரும் நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு திடீரென இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தீ மளமளவென ஆலை முழுவதும் பற்றி எரிந்தது. தகவலறிந்த சாத்தூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இதில் இயந்திரம் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும் சுமாா் ரூ. 10 லட்சம் பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.