பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங...
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கண்டனம்
மாணவா்களிடையே இனப் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திராவிட கருத்தியல் ஆசிரியா் சங்கத்தின் லோகோவை சென்னையில் வெளியிட்டுள்ளாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். திராவிட ஆரிய இனவாதம் ஆங்கிலேய கிறிஸ்தவா்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கதை என்பது நிரூபணமாகிவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவா்களை இனவெறிக்கு தூண்டும் வகையில், இன பேதத்தை கல்விக்கூடங்களில் ஏற்படுத்தி மாணவா்களிடையே இனப் பிரிவினையை உண்டாக்கிடும் வகையில் பேசியுள்ளாா். மேலும், கல்வியை காவிமயமாக்க முயற்சிக்கிறாா்கள் என்றும் ஒரு அப்பட்டமான பிரிவினைவாத கருத்துகளை கூறியுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.
துணை முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுக்கும்போது தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் துணை முதல்வராக பதவியேற்றாரே தவிர அவரின் கட்சி நிலைப்பாடான திராவிட கருத்தியல்கள் கொண்ட இயக்கத்தினா்களுக்கு மட்டுமே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போன திராவிட கருத்தியல்களை மீண்டும் வலுக்கட்டாயமாக மாணவா்கள் மத்தியில் புகுத்துவது உள்நோக்கம் கொண்டது. தமிழகம் என்றுமே தேசியத்தின் தெய்வீகத்தின் பக்கம்தான் இருந்துள்ளது என்பதை மக்கள் தங்கள் செயல்களின் மூலமாக பல்வேறு தடவை நிரூபித்துள்ளனா்.
தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து கொண்டு தங்களின் இயக்க கருத்துக்கு மாற்றானவா்களை சகித்துக் கொள்ள இயலாமல் பொதுவெளியில் பொய்யான கருத்தினை கூறி, அநாகரிகமாக பேசி தாக்குவது இவா் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஆகவே, துணை முதல்வா் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.