துலாம் ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்
துலாம் ராசியில் பிறந்த நீங்கள் எளிமையானவர்; யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டீர்கள். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங்கே!
1. துலாம் ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.
2. இந்தப் புத்தாண்டில் வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். சில விஷயங்களில் வெகுநாள்களாக வழக்குகள் இழுபறியாகிக் கொண்டிருந்தனவே... இனி, அந்த நிலை மாறும்; வழக்குகள் சாதகமாக முடியும்.
3. வருடம் பிறக்கும்போது செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும்.
4. ஒரு சொத்தை விற்றுவிட்டுப் பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
5. வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தாய்வழியிலும் மதிப்பு, மரியாதை கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும்.
6. இந்தாண்டு சனி 5-ல் நிற்கும் நிலையில், சிற்சில தருணங்களில் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது.
7. கர்ப்பிணிப்பெண்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அதிகம் சுமையுள்ள பொருள்களைத் தூக்கவேண்டாம்.
8. பூர்விகச் சொத்துப் பிரச்னையில், வேகம் கூடாது. பொறுமையுடன் காத்திருந்தால், நல்லது நடக்கும். அதேபோல், பால்ய நண்பர்கள் சிலருடன் மனத்தாங்கல் வரும்; பேச்சில் கடுமை வேண்டாம்.
9. புத்தாண்டின் தொடக்கம் முதல் 25.4.2025 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால், நீண்டநாள்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாள்களில் தூக்கம் குறையும்.
10. ஏப்ரல் 25 வரையிலும் ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
11. 26.4.2025 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும்.
12. ஏப்ரல் - 26 முதல் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது.
13. பூர்விகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். புதுச் சொத்துகள் வாங்கும்போதும் கவனம் தேவை.
14. இந்த ஆண்டு பிறப்பு முதல் 10.5.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்விகச் சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும்.
15. மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தன்னம்பிக்கைக் குறையும். திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.
16. மே-11 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே அமர்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு.
17. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவிற்கு, அவர்களுடன் நெருக்கம் ஆவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
18. வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும்.
19. வியாபாரிகளே! உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். மருந்து, உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு.
20. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் புரிந்துகொள்ளாமல் அவ்வப்போது பிரச்சனை செய்தார்கள் அல்லவா? இனி பணிந்து போவார்கள்.
21. உத்தியோகஸ்தர்களே! பணிகளை முடிப்பதிலிருந்த தேக்க நிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வருடத் தொடக்கத்திலேயே பதவி, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.
22. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர், உற்சாகத்துடன் காணப் படுவார்கள். வேலைச் சுமை அதிகரிக்கவே செய்யும்.
23. விலையுயர்ந்த பொருள்களை இரவல் கொடுப்பதோ, வாங்குவதோ கூடாது. மூன்றாம் நபர் பிரச்னையில் தலையிடாமல் இருப்பது நல்லது.
24. புதிய முயற்சிகள், பொருள் வரவு, புதிய வேலைக்கான முயற்சி போன்றவற்றில் தொடக்கத்தில் சிறிய தடைகள் தென்பட்டாலும், முடிவு வெற்றியாக அமையும்.
25. பிரதோஷ வேளையில் நரசிம்மருக்குப் பானகம் சமர்ப்பித்து வழிபடுங்கள். பொது அன்னதானப் பணிகளுக்கு இயன்ற பங்களிப்பைச் செய்யுங்கள்; பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.