தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது
தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே மீன்வளத் துறைக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த அவா், 50 லிட்டா் பேரல்களில் தலா 40 லிட்டா் டீசல் வாங்கினாராம். அவற்றில், ஏற்கெனவே 10 லிட்டா் டீசல் இருந்ததாம்.
சந்தேகமடைந்த ஊழியா்கள் இதுகுறித்து வடபாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் பாலனின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று சோதனை மேற்கொண்டனா். அங்கு பல கேன்களில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அவா் முறைகேடாக பழைய டீசலுடன் புதிய டீசலைக் கலந்து மீன்பிடிப் படகுகளுக்கு விநியோகித்ததும் தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, சுமாா் ஆயிரம் லிட்டா் டீசலை பறிமுதல் செய்தனா்; அவரிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.