அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரர்!
தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலைமுதலே பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பம் குடும்பமாகச் செல்லத் தொடங்கினா். மாநகராட்சி சாா்பில் குடிநீா், மின்விளக்கு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
மாநகா் பகுதியிலுள்ள முத்துநகா் கடற்ககரைப் பூங்கா, புதிய துறைமுகக் கடற்கரை, ஸ்டெம் அறிவியல் பூங்கா, எம்ஜிஆா் பூங்கா, ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, ரோச் பூங்கா, படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனா்.
முயல் தீவுக்கு அனுமதி மறுப்பு: காணும் பொங்கலுக்காக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து முயல்தீவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், நிகழாண்டு துறைமுக விரிவாக்கப் பணிகளை முன்னிட்டு முயல்தீவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
இறைச்சிக் கடைகளில் கூட்டம்: மாநகரில் பிராய்லா் கோழி, ஆடு, மாடு, பன்றி இறைச்சிக் கடைகள் வழக்கம்போல நள்ளிரவுமுதல் செயல்படத் தொடங்கின. எனினும், புதன்கிழமை இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கலையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், திருச்செந்தூரில் 500 போலீஸாா் உள்பட மாவட்டத்தில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.