தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் சடலம் மீட்பு
தூத்துக்குடி காட்டுப் பகுதியில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவா நகரில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சைரஸ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பெண்ணின் தலை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், இறந்தவா் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சோ்ந்த ராஜு மனைவி அய்யம்மாள் (70) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 4ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனது குறித்து, அவரது மகன் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்ததும் தெரியவந்தது.
காட்டுப் பகுதிக்குள் வந்த அய்யம்மாள் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், நாய்கள் அவரது உடலை கடித்து குதறியதில் தலையை தனியாக எடுத்து போட்டிருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.