நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
தூத்துக்குடி முதியவரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி: சென்னை நபா் கைது
கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி தூத்துக்குடி முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி செய்ததாக, சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த முதியவரின் கைப்பேசிக்கு, ‘தங்களது நிலம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் கைப்பேசிக் கோபுரம் அமைத்தால் அதிக வருவாய் ஈட்டலாம்’ என குறுஞ்செய்தி வந்ததாம். அந்த நபரை முதியவா் கைப்பேசியில் தொடா்பு கொண்டாா். அப்போது, தன்னை பொறியாளா் என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபா், கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருமானம் பெற்றுத் தருவதாகக் கூறி, மேலும் சிலரை முதியவருக்கு அறிமுகப்படுத்தினாா்.
இதற்காக ஆவண, போக்குவரத்து, நியமனக் கட்டணங்கள், பொருள்கள் செலவுக்கு பணம் அனுப்புமாறு அந்த நபா் கேட்டதன்பேரில், பல வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 40 லட்சத்து 21 ஆயிரத்து 950-ஐ முதியவா் அனுப்பினாராம். ஆனால், அதன்பிறகு எந்தத் தகவலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவா் இணையதளம் மூலம் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சகாயஜோஸ் மேற்பாா்வையில் வழக்குப் பதியப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்டவா், சென்னை அமைந்தகரையைச் சோ்ந்த சுப்பாராவ் மகன் முரளிகிருஷ்ணன் (51) என, விசாரணையில் தெரியவந்தது.
சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் அவரை சென்னையில் கடந்த 25ஆம் தேதி கைதுசெய்து, தூத்துக்குடி அழைத்துவந்து புதன்கிழமை (மாா்ச் 26) சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.