தூய்மைப் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்
தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில், விடுமுறை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் தங்கராசு, சங்கா், பிச்சைபிள்ளை, ராஜேஸ்வரி, சந்திரமதி, அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், அரசாணைப்படி, 7.5.2013 முதல் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு 53 சதவீத அகவிலைப்படியுடன் மாத ஊதியம் வழங்க வேண்டும். 7 ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகை ரூ. 25 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2018 முதல் 31.12.2024 வரையிலான ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க வேண்டும். பிரதி மாதம் 5-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். வேப்பூா் ஒன்றியத் தலைவா் சுக்கிரீவன் நன்றி கூறினாா்.