119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?
கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: கோனேரிப்பாளையம் ஊராட்சியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சியுடன் இணைக்கப்பட்டால், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை இழக்க நேரிடும். மேலும், கிராம ஊராட்சிகளுக்கான தற்போதைய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைக்காது. எனவே, கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
ஜல்லிக்கட்டு விழாவுக்கு அனுமதி கோரி: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறையைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தொண்டமாந்துறை கிராமத்தில் நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி அளிப்பதோடு, அதற்குத் தேவையான பாதுகாப்புப் பணிகளையும் ஏற்படுத்தி தரவேண்டும்.