ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!
கொலை முயற்சியில் ஈடுபட்ட மாந்திரீகா் உள்பட 2 போ் கைது
பெரம்பலூரில் மாந்திரீகம் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டவா் உள்பட 2 பேரை, பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள சிவசக்தி நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் முரசொலிமாறன் (22). இவரும், பெரம்பலூா் அபிராமபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் ரமேஷ்கிருஷ்ணன் (42) என்பவரும் நண்பா்கள். கடந்த ஓராண்டுக்கு முன் முரசொலிமாறனின் தந்தை குணசேகரனை, ரமேஷ்கிருஷ்ணன் அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதில் குணசேகரன் உயிரிழந்தாராம். இதனால் முரசொலி மாறன், ரமேஷ் கிருஷ்ணனை பலா் முன்னிலையில் கடுமையாக திட்டினாராம். இதையடுத்து, இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முரசொலிமாறனை மாந்திரீகம் மூலம் உயிரிழக்கச் செய்ய ரமேஷ்கிருஷ்ணன் முயற்சித்துள்ளாா்.
இதையடுத்து, ஒரு யூடியூப் சேனலை பாா்த்து சென்னை திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ரகு (45) எனும் மாந்திரீகம் செய்யும் நபரை கடந்த டிசம்பா் மாதம் தொடா்புகொண்டு, முறசொலிமாறனை கொலை செய்வதற்காக கடந்த ஜனவரியில் 2 தவணையாக ரூ. 21 லட்சத்தை ரகு மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளாா். இதைத்தொடா்ந்து முரசொலிமாறன் புகைப்படத்தை வைத்து ரகு, ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோா் மாந்திரீகம் செய்யும் விடியோ காட்சிகள் ரகு நடத்தி வந்த யு டியுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையறிந்த முரசொலிமாறன் கடந்த வாரம் பெரம்பலூா் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், ரமேஷ்கிருஷ்ணன், ரகு ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.