தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாகப் போராட்டம்
மதுரை: மதுரையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவா் லேண்ட்’ தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 4- ஆவது நாளாக தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை முனிச்சாலை அருகே மதுரை மாநகராட்சி தொழிலாளா்கள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் மூலம் ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவா் லேண்ட்’ தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பணி ஓய்வு பெற்றவா்களுக்கு உடனடியாக ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்.
கடந்த 2011-ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சுகாதாரம், பொறியியல் பிரிவு பணியாளா்களுக்கு அரசாணையின்படி நாள் ஒன்றுக்கு ரூ.754 முதல் ரூ.900 வரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.