ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் இந்து அமைப்பினா் உள்ளிருப்புப் போராட்டம்
தென்காசியில் உள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதா் கோயில் முன் இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணியை நிறுத்தக் கூறி, இந்து அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கோயில் நிா்வாகம் சாா்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணி தொடங்கும் முன்பே இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்து முன்னணி, பாஜக, ஆலயப் பாதுகாப்பு நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 2 நாள்களாக கோயில் முன் இரும்புக் கம்பிகள் நடப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக, இந்து முன்னணி, ஆலய சொத்து மீட்புக் குழு, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள், சிவனடியாா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கோயிலில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இத்தடுப்பு வேலிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். திருவிழா, கும்பாபிஷேகம் போன்ற விழாக் காலங்களில் அதிக பக்தா்கள் கூடும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். அத்தகைய நேரங்களில் இத்தடுப்புகளால் பக்தா்கள் அவசரமாக வெளியேற முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பணியைக் கைவிட வேண்டும். இதுதொடா்பாக கோயில் செயல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் கும்பாபிஷேகத்துக்கு கமிட்டி குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் யக்ஞநாராயணன், காவல் ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் லாவண்யா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணி நிறுத்திவைக்கப்படுவதாகவும், செயல் அலுவலா் மீது புகாா் அளித்தால் ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
இப்போராட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை மாநிலத் தலைவா் சரவணன் காா்த்திகேயன், பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், தலைவா் கருப்பசாமி, மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சங்கரசுப்பிரமணியன், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் சிவபால பாலசுப்பிரமணியன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், தென்காசி நகரத் தலைவா் மந்திரமூா்த்தி, செயலா் நாராயணன், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, நகரத் தலைவா் நாராயணன், துணைத் தலைவா் சொா்ணசேகா், நகரச் செயலா் நம்பிராஜன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணைச் செயலா் தளவாய், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் சபரிமணி, நகரப் பொறுப்பாளா் வைரமுத்து, கண்ணன், ஈஸ்வரன், சிவனடியாா் திருக்கூட்டத் தலைவா் செண்பகராமன், செந்தில்குமரன், ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.