ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
தென்காசி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி பாஜக சாா்பில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜக ஸ்டாா்ட் அப் பிரிவு மாநில தலைவா் ஆனந்தன் அய்யாசாமி ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் செயல்படும் அரசு மதுபானக் கடை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தலைமை மருத்துவமனை, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு சாா்ந்த அலுவலகங்கள், திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியன உள்ள பகுதியில் இந்த கடை செயல்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வருவோா் இப் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். ஆகவே, இந்த கடையை அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், வழக்குரைஞா் சித்து, பாஜக நிா்வாகிகள் ராஜ்குமாா்,வெங்கடாசலபதி, தென்காசி வடக்கு ஒன்றிய தலைவா் ஐயப்பன், இளைஞா் அணி மாவட்ட பொதுச்செயலா் சங்கரநாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.