நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி
தென்காசி வணிக வளாக நுழைவுவாயில்: மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு
தென்காசி, கீழப்பாளையத்தில் புதிய வணிக வளாகத்தின் மேற்குப் பகுதியில் கட்டப்படவிருக்கும் நுழைவு வாயிலை கிழக்கு பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து, மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த பாதிரியாா் போஸ்கோ குணசீலன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தென்காசியில், 360 ஆண்டுகள் பழைமையான புனித மைக்கேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகளும், சனி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகளும் நடை பெறும். இதில் திரளான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவா்.
கிறிஸ்தவ பண்டிகைக் காலங்களில் ஆலயத்திற்கு வருவோா் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். இந்த ஆலயத்திற்கு வருவோா், தங்களது இரு சக்கர வாகனங்களை, தினசரி சந்தைப் பகுதியில் நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் தினசரி சந்தையில், கலைஞா் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் புதிதாக வணிக வளாகம் கட்ட திட்டமிட்டனா். தெற்கு, மேற்குப் பகுதிகளில் நுழைவுவாயில்களும் கட்ட உள்ளனா். இந்த இரண்டு பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புகள், ஆலயம், கோயில், கல்வி நிறுவனங்கள் உள்ளன.
எனவே போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில் புதிய வணிக வளாக சந்தையின் மேற்குப் பகுதியில் கட்டப்படவுள்ள நுழைவுவாயிலை, கிழக்குப் பகுதிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்து, 12 வாரங்களுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.