பூனைக்கடியை அலட்சியம் செய்ததால் நேர்ந்த துயரம்: ரேபிஸ் தாக்கிய இளைஞர் தற்கொலை!
பூனைக் கடியால் பாதிக்கப்பட்ட இளைஞா் மதுரை அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (25). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரை பூனை கடித்தது. முறையான சிகிச்சை பெறாத நிலையில், பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. இதனால், தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனா்.
இதையடுத்து, பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வாா்டில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா். அங்கு தனி அறையில் இருந்த நிலையில் கடுமையான வலி, மன உளைச்சல் காரணமாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த போா்வையால் அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.