கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!
செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அமைச்சரவையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது திமுக.
செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகிய அமைச்சர்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கலாம், மிரட்டலாம் என நீதிமன்றத்தில் வாதிட்டது அமலாக்கத்துறை.

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, ஜாமீன் வேண்டுமா? என்பதை முடிவு செய்ய 28ம் தேதி வரை கெடு விதித்திருந்தது நீதிமன்றம். இந்த நிலையில் அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது திமுக அரசு.
வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது திமுக.
பொன்முடியை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன. ஏற்கெனவே பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கட்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுகப்பட்டதால் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
DMK அமைச்சரவையில் மாற்றங்கள்
செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை இலாகா, போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கருக்கு கூடுதலாக வழங்கப்படவுள்ளது.
அவரது மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி கூடுதலாக கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
பொன்முடி நிர்வகித்து வந்த வனத்துறை அமைச்சர் பதவி பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது..
முன்னதாக அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. அவருக்கான இலாகா அறிவிக்கப்படவில்லை.
புதிய அமைச்சர் நாளை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.