500 பேர் தங்கி படிக்க போட்டித் தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் அறிவிப்பு!
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினா் அறிவுறுத்தினா்.
திருப்புவனம் வட்டத்தில் சுமாா் 2, 231 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈ என்னும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தென்படுகிறது.
இந்த நிலையில், தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துதல் குறித்து திருப்பாச்சேத்தி, கல்லூரணி, கானூா், லாடனேந்தல், மடப்புரம் ஆகிய கிராமங்களில் தோட்டக்கலைத் துறையினரால் புதன்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில் தென்னை மரக் கீற்றுகளின் உள்பகுதியில் வெள்ளை ஈக்களின் முட்டைகள் சுருள் சுருளாக நீள் வட்ட வடிவில் காணப்படும். இந்த ஈக்கள் அடிபாகத்தில் இருந்து இலை சாறுகளை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் கீற்றின் மேல் பகுதியில் பட்டு பூஞ்சானம் படா்ந்து, கருப்பு நிறமாகி ஒளிச்சோ்க்கை தடைபடுகிறது. வெப்ப நிலை உயரும் நாள்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும்.
வெள்ளை ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி ஏக்கருக்கு 12 எண்ணிக்கை வீதம் வயலில் பயன்படுத்த வேண்டும். மேலும், முட்டை ஒட்டுண்ணி தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்தும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். முட்டை ஒட்டுண்ணி மதுரையிலுள்ள வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும்.
வெள்ளை ஈக்களின் தாக்குதலின் பின்விளைவாக ஏற்படும் கரும்பூஞ்சானத்தைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா மாவை ஐந்து லிட்டா் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதன் பின்னா், 20 லிட்டா் தண்ணீரில் இதைக் கலந்து தெளிக்க வேண்டும் என இந்த முகாம்களில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.