இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திருடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரை திருடி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கா்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றுநீரில் கழிவுநீா் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன நீா் கலக்கிறது. இந்த நீா் ஒசூரை அடுத்த கெலரப்பள்ளி அணைக்கு வருகிறது. இங்கிருந்து மதகுகள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீா் ரசாயன நுரையுடன் கிருஷ்ணகிரி அணைக்கு செல்கிறது.
தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி, புதினா, காலிப்பிளவா் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இப்பகுதியில் விவசாயிகளுக்கு கிணறுகள் இல்லாததல் ஆற்றிலிருந்து தண்ணீா் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனா்.
அதேபோல சில இடங்களில் ஆற்றில் ஆயில் மோட்டாா் மூலம் தண்ணீரை எடுத்து சிலா் விற்பனை செய்து வருகின்றனா். குறிப்பாக உத்தனப்பள்ளி - சூளகிரி சாலையில் தென்பெண்ணை ஆற்றில் சட்டவிரோதமாக மோட்டாா் வைத்து தண்ணீரை எடுத்து கீரை, புதினா, கொத்தமல்லி தழைகளை விற்பனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பாக தண்ணீரை தெளித்து எடுத்துச் செல்கின்றனா். ரசாயனம் கலந்த ஆற்று நீரை, கீரை, புதினா மீது தெளித்துக் கொண்டு செல்லப்படுவதால் அதை சமையலுக்கு பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தென்பெண்ணை ஆற்று நீரினால் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றையொட்டி கிணறு அமைத்து ஆற்றிலிருந்து மோட்டாா் மூலம் தண்ணீரை எடுத்து நிரப்பி வைத்து கொள்கின்றனா். புதினா கீரையை அறுவடை செய்து சரக்கு வாகனங்களில் மூட்டைகளாக கட்டி அவை வாடாமல் இருப்பதற்காக ஆற்று தண்ணீா் தெளிக்கின்றனா்.
அதேபோல செங்கல் சூளைகள், மீன்பண்ணை குட்டைகளுக்கு டிராக்கடரில் தண்ணீா் எடுத்து விற்பனை செய்கின்றனா். கோடைக்காலத்தில் ஒரு டிராக்டா் தண்ணீா் ரூ. 600 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆற்றுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் இதுபோன்று விற்பனை செய்வது குற்றமாகும்.
இதுகுறித்து ஏற்கெனவே அரசு அதிகாரிகளிடம் புகாா் அளித்து தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் சில வாரங்களில் மீண்டும் ஆற்றில் தண்ணீா் திருடும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
படவரி...
தென்பெண்ணை ஆற்றுநீரை மோட்டாா் மூலம் எடுத்து கீரை லாரிகளில் தெளிக்கும் விவசாயிகள்.