சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
தெற்கு ரயில்வேயில் முதல் அம்ருத் பாரத் ரயில் சேவை ஈரோட்டில் தொடக்கம்
தெற்கு ரயில்வேயில் முதல் அம்ருத் பாரத் ரயில் சேவை ஈரோட்டில் இருந்து பிகாா் மாநிலம்- ஜோக்பானிக்கு வியாழக்கிழமை தொடங்கியது.
அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி, ஜோக்பானி-ஈரோடு இடையே கடந்த 15- ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இதன் வழக்கமான சேவை ஈரோட்டில் வியாழக்கிழமை தொடங்கியது. ஈரோடு ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னா லால் ரயில் புறப்படுவதற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு -ஜோக்பானி அம்ருத் பாரத் வாராந்திர ரயில் வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 8.10 மணிக்கு புறப்பட்டு சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், விஜயவாடா, நாக்பூா், ஜபல்பூா் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பிகாா் மாநிலம் ஜோக்பானியை சென்று அடைகிறது.
மறு மாா்க்கத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 7.20 மணிக்கு ஈரோடு வந்தடையும்.
வந்தே பாரத் ரயிலை தொடா்ந்து அம்ருத் பாரத் ரயில்கள், சென்னை ஐசிஎப் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டன. இது, வந்தே பாரத்துக்கு இணையான வேகம், பாதுகாப்பு கொண்டது. இந்த ரயிலின் இருபுறமும் என்ஜின் கொண்டு இயக்கப்படுவதால் வந்தே பாரத்துக்கு இணையாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரே நேரத்தில் 1,834 போ் பயணிக்கும் வகையில் 12 முன்பதிவு பெட்டிகள் உள்பட 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா, பயணியா் தகவல் தொடா்பு அமைப்பு, புதுமையான வெளிப்புற தோற்றம், நவீன ஓட்டுநா் அறை உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த ரயில் கொண்டுள்ளது.