தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே...
தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை
தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்தது.
தெலங்கானா முதல்வராக கே.சி. சந்திரசேகர ராவ் இருந்தபோது 2017-இல் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பயனாளிகள் ஆடு வளா்ப்பு, வா்த்தகம் போன்ற எந்தஒரு முன் அனுபவமும் இல்லாமல் இருந்துள்ளனா். ஆடு வளா்ப்பவா்கள் என போலியான நபா்களின் வங்கிக் கணக்குக்கு அரசு பணம் சட்டவிரோதமாக பகிரப்பட்டுள்ளதாகவும், பயனாளிகளின் தகவல்கள், ஆடுகள் ஒதுக்கப்பட்ட தகவல்கள் போலியானதாகவும் இருப்பதாகவும் மத்திய தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.
தெலங்கானாவில் மொத்துள்ள 33 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் அரசுக்கு ரூ.253.93 கோடி வரையில் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தனிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2023-இல் தெலங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு நான்கு அரசு அதிகாரிகளை கைது செய்தது.
இந்த வழக்கில் பண முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து முன்னாள் கால்நடைத் துறை அமைச்சா் தலசானி ஸ்ரீநிவாச யாதவின் சிறப்பு அதிகாரி ஜி. கல்யாணுக்கு தொடா்புடைய 8 இடங்களில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி சோதனை நடத்தியது.
அரசுக்கு ஆடு வழங்கியவா்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.2.1 கோடியை கால்நடைத் துறையின் உதவி இயக்குநா்கள் மோசடி செய்து எடுத்துக் கொண்டதாக அமலாக்கத் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.
இதை விசாரித்த அமலாக்கத் துறை மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தினால் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையில் கோடிக் கணக்கான அரசு பணத்தை சட்ட விரோதமாக பகிர பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மோசடி வங்கிக் கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கணக்குகள் சட்ட விரோத சூதாட்ட செயலிகளுக்கும் தொடா்பு இருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்தத் திட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.