காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது
தாஹோத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் நடந்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில அமைச்சா் பச்சுபாய் காபாத்தின் இளைய மகன் கிரண் உள்பட 4 போ் காவல் துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இந்த ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஜகதீஷ்சிங் பண்டாரி இதுதொடா்பாக மேலும் கூறுகையில், ‘இந்த வழக்கில் அமைச்சரின் இளைய மகனும் முன்னாள் தாலுகா வளா்ச்சி அலுவலருமான கிரண், முன்னாள் திட்ட உதவி அதிகாரிகள் இருவா் உள்பட 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அமைச்சரின் மூத்த மகன் பல்வந்த் உள்பட 7 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது’ என்றாா்.
குஜராத்தில் தாஹோத் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக முடிக்காமல், பணி நிறைவுச் சான்றிதழை போலியாக உருவாக்கி அரசிடம் இருந்து அதற்குரிய பணம் பெற்ாக சில ஒப்பந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை அரசுக்கு ரூ.71 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த முறைகேடு குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கள ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
தற்போது குஜராத் மாநிலத்தின் பஞ்சாயத்து மற்றும் வேளாண் துறை அமைச்சராக உள்ள பச்சுபாய் காபாத்தின் மகன்கள் பல்வந்த் மற்றும் கிரண் உள்பட ஒப்பந்த நிறுவனங்களின் 35 உரிமையாளா்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா்.
அரசு ஒப்பந்தம் எடுக்க தகுதியற்ற அல்லது அதிகாரபூா்வ ஒப்பந்தப் புள்ளி நடைமுறையிலேயே பங்கேற்காத நிறுவனங்களும் அரசு நிதியை முறைகேடாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சரின் மகன்கள் இருவா் ஊழல் வழக்கில் அடுத்தடுத்து கைதாகியிருப்பது குஜராத் மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.