கொடைக்கானல்: வேரோடு கஞ்சா செடி விற்பனை; போதையில் மாட்டிய கல்லூரி மாணவர்; நடந்தது...
தேர்தல் ஆணையத்தில் கேஜரிவால் மீது பாஜக வேட்பாளர் புகார்!
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புது தில்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி தில்லி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப். 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் புது தில்லி தொகுதி வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தனது தொகுதி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
நேற்று(ஜனவரி 19) புது தில்லியில் உள்ள கிழக்கு கிட்வாய் நகர், வகை II குடியிருப்புகளில், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், மக்களுக்கு நாற்காலிகளை வழங்கினர். அரவிந்த் கேஜரிவால்தான் இந்த நாற்காலிகளை வழங்கச் சொன்னதாகவும் கூறியுள்ளனர்.
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதால் கேஜரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜக வேட்பாளர்கள், தில்லி மக்களுக்கு சேலை, நகை உள்ளிட்டவற்றை வழங்குவதாக கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.