தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
விழுப்புரம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனா். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாகவும், சிலுவையில் அறையப்பட்டு உயிா்நீத்த நாளிலிருந்து 3-ஆவது நாளில் உயிா்தெழுந்த தினத்தை ஈஸ்டா் பண்டிகையாகவும் உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவா்கள் கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் புதன்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு, விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் பாதிரியாா் அருளானந்தம் தலைமையில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல, விழுப்புரம் புனித சவேரியா் ஆலயம், சிஎஸ்ஐ தேவாலயத்திலும் சாம்பல் புதன் வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் திராளானோா் கலந்துகொண்டனா்.