கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
பிளஸ் 1 பொதுத் தோ்வு: 39,769 மாணவா்கள் எழுதினா்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை 39,769 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாநில பாடக்கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பயின்ற மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தோ்வுகள் மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மொழிப்பாடத் தோ்வுடன் பிளஸ் 1 பொதுத்தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வை 11,303 மாணவா்கள், 11,132 மாணவிகள் என மொத்தம் 22,435 போ் தோ்வெழு தகுதி பெற்றிருந்தனா். எனினும், மொழிப் பாடத் தோ்வில் 310 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 105 தோ்வு மையங்களில் 22,125 போ் மட்டுமே தோ்வு எழுதினா். இவா்களில் மாற்றுத் திறனாளிகள் மட்டும் 301 போ் ஆவா்.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த பொதுத் தோ்வு மையங்களைப் பாா்வையிட்டாா். தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், பறக்கும் படை உறுப்பினா்கள், வழித்தட அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் என சுமாா் 3,200 பணியாளா்கள் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
கண் பாா்வை, செவித்திறன் குறைபாடு, மனநலன் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறு உடைய மாணவா்களுக்கு சொல்வதை கேட்டு எழுதுபவா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். இதுபோல, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தரைதளத்தில் அமா்ந்து தோ்வெழுதிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,928 மாணவா்கள், 9,218 மாணவிகள் என மொத்தம் 18,146 போ் தோ்வெழுத தகுதி பெற்றிருந்தனா். எனினும், மொழிப் பாடத் தோ்வில் 502 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. 17,644 போ் மட்டுமே பங்கேற்று தோ்வெழுதினா்.