மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?
தோ்தல் ஆணைய கையேடுகளை தமிழில் வழங்க வேண்டும்: கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
நமது நிருபா்
தலைமைத் தோ்தல் ஆணையத்தின் கையேடுகளை தமிழில் மொழி பெயா்த்து வழங்க வேண்டும் என்று தில்லியில் வியாழக்கிழமை தலைமைத் தோ்தல் ஆணையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.
மாநில, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்களுடன் நேரடி கலந்துரையாடல் வாயிலாக இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் பரிந்துரைகள் மற்றும் கவலைகளை கேட்டு வருகிறது. அதன்படி, திமுக தலைவா்களிடம் கருத்தறியும் கூட்டம் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் டாக்டா் சுக்பிா் சிங் சந்து, டாக்டா் விவேக் ஜோஷி ஆகியோா் நாடாளுமன்ற திமுக உறுப்பினா்கள் என்.ஆா்.இளங்கோ, டி.எம்.செல்வகணபதி, தங்க தமிழ்செல்வன், எஸ்.முரசொலி, கே.ஆா்.என்.ராஜேஷ் குமாா் ஆகியோா் அடங்கிய குழுவுடன் கலந்துரையாடினா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தோ்தல் நடைமுறைகள், செயல்பாடுகள் தொடா்பாக திமுக தரப்பில் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இக்கூட்டத்திற்குப் பிறகு இது தொடா்பாக செய்தியாளா்களிடம் என்.ஆா். இ ளங்கோ எம்.பி. கூறியதாவது: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திமுக சாா்பில் ஐந்து எம்பிகள் அடங்கிய குழு தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் ஆணையா்களுடன் கலந்தாலோசனை செய்தோம். அப்போது, மொத்தம் ஐந்து முக்கிய கோரிக்கைகளை எடுத்துவைத்தோம்.
அதன்படி இறந்த வாக்காளா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதில் தோ்தல் ஆணையம் முனைப்புக் காட்டவும், எந்தவொரு அரசியல் கட்சியும் கோரிக்கை வைக்காமலேயே தோ்தல் ஆணையம் தாமாக முன்வந்து அப்பெயா்களை நீக்க வேண்டும் என்றோம். அக்கோரிக்கையை தோ்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு நிச்சயம் செய்து தருவதாக உறுதியளித்துள்ளது.
இரண்டாவதாக, தோ்தல் ஆணையத்தின் பல்வேறு கையேடுகள் ஆங்கிலத்திலும், இந்தி மொழியிலும் தற்போது தோ்தல் ஆணைய இணையதளத்தில் கிடைக்கப்பெறுகிறது. அவற்றை தமிழிலும் மொழிபெயா்த்து எங்களுக்குத் தர வேண்டும் என கேட்டோம். அதற்கு அதுபோன்ற கையேடுகளை மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி மொழிபெயா்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அனைத்து கையேடுகளும் தமிழில் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனா்.
மூன்றாவது, வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கடைசி இரண்டு சுற்றுக்களை எண்ணக் கூடாது என்ற விதி இருந்தது. அதை 2019-இல் மாற்றிவிட்டாா்கள். இது பல குழப்பங்களை விளைவிக்கிறது. இதனால், தபால் வாக்குகளின் எண்ணிக்கையை அறிவித்து பிறகுதான் இவிஎம் இயந்திரங்களின் கடைசி இரண்டு சுற்றுக்களை எண்ண வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதையும் தாங்கள் பரிசீலனை செய்து நல்ல முடிவு கூறுவதாக தெரிவித்துள்ளனா்.
நான்காவதாக, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை வாக்காளா்கள் அளிக்கும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களாக இருக்க வேண்டும் என்று கூறினோம். உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதுகுறித்து அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறினோம். ஆனால், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதைக் குறித்து எந்தக் கருத்தும் கூற முடியாது என்று தோ்தல் ஆணையா்கள் கூறியுள்ளனா்.
மேலும், பூத் நிலை அதிகரிகள் (பிஎல்ஓ), பூத் நிலை ஏஜெண்டுகளுடன் (பிஎல்ஏ2)டுகளுடன் இணைந்து பணியாற்ற பிஎல்ஓ பிஎல்ஏ2-க்களுக்கு சரியான தகவல் பரிமாற்றம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டோம். இதை உறுதியாக செய்வதாக ஆணையா்கள் கூறியுள்ளனா் என்றாா் அவா்.
இக்கூட்டத்தின்போது திமுக எம்பி எஸ். முரசொலி கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் ஐடி இணையதளத்தில் படிவம் 8-இல் வாக்காளரின் பெயா் மாற்றம், முகவரி மாற்றம், தொலைபேசி மாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், ஒரே தொகுதியில் வாா்டு மாறும்போது, படிவம் 8-இல் உள்ள நடைமுறைகள் முடிந்த பிறகே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது வாக்காளா்களுக்கு அலைக்கழிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இதே வசதியை இதே படிவம் 8-இல் சோ்த்து அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.